சாலை, ரயில் நிலைய பகுதிகளில் திறந்த வெளி பார்களால் மக்கள் அவதி

திருவள்ளூர், பிப். 26: மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் ரயில்நிலையம், பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், போலீஸ் எஸ்.பி., அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இதை ஒட்டி ஆயிரக்கணக்கான கிராமங்கள் அமைந்துள்ளன.

மாவட்டத்தின் சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பேணி காக்க வேண்டிய கடமை அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆனால், இதற்கு எதிர்மறையாக, இங்குள்ள ரயில் நிலையம் உட்பட பொது இடங்களில், மதுபாட்டில், டம்ளர் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இம்மாவட்டத்தில், ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடந்து வருகிறது. இங்கு, மக்கள் தொகையை கணக்கிட்டால், 5000 பேருக்கு ஒரு கடை வீதம், மதுவிற்பனை நடந்து வருகிறது.

இதனால், மாவட்டத்தில் குக்கிராமம் முதல், நகர பகுதி வரை சாலையோரம், விளையாட்டு மைதானம் என பல இடங்களிலும் காலி மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன.அதனுடன், வாகனங்களில் அமர்ந்து சாலையோரங்களில் மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களை சாலையில் வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை தவிர, உணவு உட்கொண்ட பின்பு, அதன் மிச்சங்கள், பிளாஸ்டிக் பைகளையும் சாலையில் வீசுகின்றனர். மாவட்டம் முழுவதும், பல டாஸ்மாக் கடைகள் இருந்தும், பெரும்பாலான கடைகளில் ‘’பார்’’ வசதிகள் இல்லை. இதனால், மது அருந்துபவர்கள், கடை முன்பு நின்று குடித்து விட்டு அங்கேயே காலி மது பாட்டில்கள், டம்ளர்களை வீசி விடுகின்றனர். இதனால், திருவள்ளூர் ரயில் நிலையம், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு உட்பட பல பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் டம்ளர்கள் குவிந்து கிடக்கிறது. இத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: