மன்னார்குடி அரசு கல்லூரியில் தேசிய மாணவர் படை முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கம்

மன்னார்குடி, பிப்.26: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவர் படை முன்னாள் மாணவர்கள் சங்க துவக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்று தற்பொழுது பல்வேறு துறைகளில் நாடு முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்னாள் என்சிசி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். தற்போது பயிற்சி பெற்று வரும் தேசிய மாணவர் படை வீரர்களுக்கு உதவிகள் செய்தல், அவர்கள் இந்திய ஆட்சிப் பணி மற்றும் ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சிகள் மற்றும் உதவிகளை வழங்குதல், சிறப்பாக பயிற்சி முடிக்கும் மாணவர்களை பாராட்டுதல்,கல்லூரியின் வளர்ச்சியில் பங்கு பெறுதல், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல், புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவிகள் செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக இச்சங்கம் துவங்கப்பட்டுள்ளது. விழாவிற்கு ஆசிரியர் பாரதி தலைமை வகித்தார். தேசிய மாணவர் படையின் முன்னாள் பயிற்சி அதிகாரிகள் சோமசுந்தரம், இருளப்பன் ஆகியோர் சங்கத்தின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் சுரேஷ் சங்க தலைவராகவும், நூலகர் செந்தில்குமார் துணைத் தலைவராகவும், தாமஸ் கிருபாகர பாண்டியன் செயலாளராகவும், கருணாநிதி இணைச் செயலாளராகவும், உதவிப் பேராசிரியர் பொன் கார்த்திகேயன் பொருளாளராகவும், ஆசிரியர் அன்பரசு தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரவி மற்றும் கல்லூரியின் என்சிசி படை அதிகாரி லெப் ராஜன்ஆகியோரை சந்தித்து பேசினர். வரும் கல்வியாண்டில் கல்லூரிக்கு வருகை தர இருக்கும் தேசிய தர நிர்ணய குழு முன் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் முன்னாள் தேசிய மாணவர் படை மாணவர்கள் சங்கம் சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. முன்னதாக ஆசிரியர் வாசுதேவன் வரவேற்றார்.முடிவில் தேசிய மேல் நிலைப்பள்ளி என்சிசி அலுவலர் திவாகர் நன்றி கூறினார்.

Related Stories: