சேரன்மகாதேவி வெள்ளநீர் கால்வாய் பாலத்தில் இணைப்பு சாலை போடாததால் தொடர் கதையாகும் விபத்துகள்

வீரவநல்லூர், பிப். 21: சேரன்மகாதேவி - களக்காடு சாலையில் வெள்ளநீர் கால்வாய் பாலத்தில் இணைப்பு சாலை போடாததால் விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன. சேரன்மகாதேவி -களக்காடு  சாலையில் தனியார் பாலிடெக்னிக் அருகே வெள்ளநீர் கால்வாய் கடந்து  செல்கிறது. இக்கால்வாயை கடப்பதற்காக சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்போது  புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. இக்கால்வாயை  கடந்து செல்ல இதுநாள் வரை வாகன ஓட்டிகள் அருகிலிருந்த ஆபத்தான சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வந்தனர்.  இந்த சர்வீஸ் சாலையானது ஆபத்தான வளைவுகளை கொண்டிருந்ததால் பல ஆண்டுகளாக  வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருந்தனர். இதையடுத்து  புதிய பாலம் கட்டும் பணிகள், தீவரப்படுத்தப்பட்டு கடந்த ஜூலை மாதம் பணிகள்  நிறைவடைந்தன. தொடர்ந்து ஆகஸ்ட்டில் புதிய பாலத்தில் போக்குவரத்து  துவங்கியது. பாலம் பயன்பாட்டிற்கு வந்து 7 மாதங்கள் ஆன நிலையில் தற்போது  வரை பாலத்தையும், சாலையையும் இணைக்க இணைப்பு சாலை போடப்படாமல் உள்ளது. மேலும்  பாலம் ஆரம்பிக்கும் இடத்தில் போதிய பாதுகாப்பு கைப்பிடி சுவர் இல்லாததால்  எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறும் வாகனங்கள் 50 அடி ஆழமுள்ள கால்வாயில்  கவிழும் நிலை உள்ளது.

இரவு நேரங்களில் இப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால்  கரணம் தப்பினால் மரணம் என்ற கதியில் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர். தற்போது இந்த இடத்தில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால் டூவிலர்களில்  வருபவர்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.  எனவே சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சாலைக்கும், பாலத்திற்கும் இணைப்பு சாலை அமைத்து பாலத்தின் பக்கவாட்டில் தடுப்பு  வேலிகள் அமைக்க வேண்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.நெடுஞ்சாலைத்துறை ஏஇ அலுவலகம் திறக்கப்படுமா?சேரன்மகாதேவி - களக்காடு சாலையில் ரவுண்டானாவிற்கு தென்புறம் புதிதாக  நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த  கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 மாதமாகியும் இதுவரை திறக்கப்படாமல்  உள்ளது. இதனால் பாரதியார் தெருவில் வாடகை கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட்டு  வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து இக்கட்டிடத்தை பயன்பாட்டிற்கு  கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: