இனப்பெருக்கத்திற்கு கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு

சாயல்குடி, பிப்.20:  சாயல்குடி பகுதி கடற்கரைகளில் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியாக கருதப்படும் தூத்துக்குடி மாவட்ட கடல் எல்லையான வேம்பார் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கடல் எல்லை வரை கடல் ஆமைகள் அதிகமாக உள்ளது. இவைகளின் இனப்பெருக்க காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை மணல்களில் ஆமைகள் முட்டைகளை இட்டு செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு காலம் தாமதமாக ஆமைகள் முட்டைகளை இட்டு வருகிறது.

முட்டைகளை சேகரிக்கும் பணியில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பாதுகாப்பு வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் வாலிநோக்கம் கடல் முதல் வேம்பார் கடல்கரை வரை கிராம இளைஞர்களுடன் ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் சாயல்குடி கடற்கரை பகுதியில் 10 இடங்களில் சேகரிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளை பாதுகாப்பு நிறைந்த ஒப்பிலான் கடற்கரை மணலில் புதைத்து, வேலி அமைத்து பாதுகாத்து கண்காணித்து வருகின்றனர். சுமார் 45 நாட்கள் கழித்து முட்டையிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் பின்னர் கடலில் விடப்படும்.

Related Stories: