ரேஷன் கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை

தேவாரம், பிப். 18: தேவாரத்தில் ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேவாரத்தில் உள்ள அய்யப்பன் கோயில் தெருவில் 5ம் நம்பர் ரேசன்கடை செயல்படுகிறது. இந்த கடை மூலம் மாதந்தோறும் தமிழக அரசு வழங்கிடும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் உள்ள 10, 11, 16, 17வது வார்டுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கடை மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த கடையை இடமாறுதல் செய்து பஸ்நிலையம் எதிரே உள்ள கூட்டுறவு சொசைட்டி பில்டிங்கிற்கு கொண்டு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரேஷன் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து நேற்று திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தாலுகா அலுவலக சிவில் சப்ளைத்துறையினர் வந்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் கடையை இதே பகுதியில் இயங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ரேஷன் கடையை தூரமாக இடமாற்றினால் பொருட்கள் வாங்குவதில் பிரச்னை உண்டாகும். அரிசி உள்ளிட்ட பொருட்களை தூக்கி வருவதிலும் சிரமம் ஏற்படும். எனவே, 5ம் நம்பர் ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய கூடாது என்றனர்.

Related Stories: