குழாய் மூலம் பெட்ரோல், டீசல் திட்டம் மொடக்குறிச்சியில் 9 கிராமங்கள் பாதிப்பு

ஈரோடு, பிப். 18: ஐடிபிஎல் திட்டத்தால் மாவட்டத்தில் அதிக அளவில் மொடக்குறிச்சி வட்டத்தில் மட்டும் 9 கிராமங்கள் பாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் இருகூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகந்தி வரை பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இக்குழாய்கள் அனைத்தும் விவசாய விளைநிலங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மொத்தம் 312 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.

 ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு ஆகிய வட்டங்களில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட உள்ளது.

இதில் அதிகபட்ச பாதிப்பு மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் என்பது தெரியவந்துள்ளது. இதன்படி அட்டவணை அனுமன்பள்ளி, அவல்பூந்துறை, துய்யம்பூந்துறை, பூந்துறைசேமூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, புஞ்சைகாளமங்கலம், நஞ்சைகாளமங்கலம், குருக்கபாளையம் உள்ளிட்ட 9 வருவாய் கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சில கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏற்கனவே உயர்மின் கோபுர திட்டத்திற்கு நிலத்தை கொடுத்துள்ள நிலையில் அதே விவசாயிகளின் நிலத்தில் ஐடிபிஎல் திட்டமும் வர உள்ளதால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இதனிடையே வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள விளைநிலங்களை மத்திய,மாநில அரசுகள் கூறுபோட்டுள்ளதாகவும், இதை தடுக்க வேண்டிய தொகுதியின் அதிமுக எம்எல்ஏ சிவசுப்ரமணியம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அரசுகளுக்கு சாதகமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் கூட தொகுதி எம்எல்ஏ என்ற வகையில் ஒரு முறை கூட விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறியவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Related Stories: