பரமத்தி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்

பரமத்திவேலூர், பிப்.17:பரமத்தி ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சதீஷ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன்.திலகம், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் தண்டபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர்  இயக்க கொடியினை ஏற்றி வைத்து பேசினர். மாநிலச் செயலாளர் முருக செல்வராசன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழ்நாடு அரசின் 2020-21ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்தோ, ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்வது குறித்தோ எந்த தகவலும் இல்லை.  இந்த நிதிநிலை அறிக்கை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் சாத்துவதாக அமைந்துள்ளது,’ என்றார். பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய நிர்ணய பலன்கள் நிலுவைகள், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதிய பலன்கள், பரமத்தி ஒன்றியத்தில் 12 பள்ளிகளுக்கு தூய்மைப் பணியாளர் ஊதியம் வழங்க வலியுறுத்தியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை  நிறைவேற்ற விட்டால் வரும் 25ம் தேதி(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 5 மணிக்குள் பரமத்தி வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அமிர்தவல்லி வரவேற்றார். இலக்கிய அணி அமைப்பாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

Related Stories: