ஊத்துக்கோட்டையில் அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாடு

ஊத்துக்கோட்டை, பிப். 17 :  ஊத்துக்கோட்டை கிருஷ்ணா குடியிருப்பு பகுதியின் பின்னால் உள்ள சுடுகாட்டில் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் சடலங்களை அடக்கம் செய்ய வருபவர்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி 8வது வார்டில் உள்ள அரசு அறிஞர் அண்ணா மருத்துவமனை பின்புறம் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாததால் சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் அதே பகுதியில் செட்டியார் சுடுகாடும் உள்ளது. இதில் செட்டியார் மற்றும் மற்ற இனத்தவர்களில் யாராவது இறந்தால், அந்த சடலங்களையும்  அடக்கம் செய்கிறார்கள். அந்த இடத்தில் முட்புதர் அடர்ந்து காணப்படுகிறது. மேலும் மயானத்தில் மின்சாரம், தண்ணீர் உட்பட அடிப்படை வசதி இல்லை. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், சடலங்களை அடக்கம் செய்ய செல்பவர்கள், அங்குள்ள புதர்களில் உள்ள பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள்  தீண்டிவிடுமோ என்ற அச்சத்துடனேயே  செல்லவேண்டியுள்ளது. எனவே, சுடுகாட்டு பகுதியில்  மின்சார வசதியும், தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என 8வது வார்டு திமுக பிரதிநிதி ஏ.வி.நெடுஞ்செழியன் ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார்.

Related Stories: