வீரகனூரில் 23 ஆண்டுகளுக்கு பின் திருத்தேர் வெள்ளோட்டம்

கெங்கவல்லி, பிப்.13: வீரகனூரில் 23 ஆண்டுகளுக்கு பின் திருத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. கெங்கவல்லி தாலுகா, வீரகனூரில் கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த வருடம் தேரோட்டம் நடத்த வேண்டும் என ஊர் பெரியோர் முடிவு செய்தனர். கடந்த சில நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தையில், 2020ம் வருடம் தேரோட்டம் நடத்துவது என ஒருமனதாக முடிவெடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனர். பொன்னாளியம்மன், காளியம்மன், மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் திருத்தேர் என்பதால், திருத்தேரை பல லட்சம் செலவில் சீரமைத்து நேற்று வெள்ளோட்டம் நடைபெறும் என ஊர்பெரியோர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை 9 மணி அளவில் அனைத்து விதமான பூஜைகள் செய்து, கிடா பலியிட்டு சரியாக காலை 11.30 மணிக்கு திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து ஊரைச் சுற்றி வந்தனர். தேர் இழுப்பதற்கு முன்னதாக, வானில் 2 கருடன்கள் தேரைச் சுற்றி வட்டமடித்தது பொதுமக்களை பரவசத்தில் ஆழ்த்தியது. காலை 11.30 மணிக்கு தொடங்கிய வடம் பிடித்தல் நிகழ்ச்சி சரியாக நண்பகல் 2.30 மணிக்கு முடிவடைந்தது. விழாவிற்கு வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 23 ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா நடைபெற உள்ளதால்,   பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: