நெல்அறுவடை தகராறில் ஒருவர் அடித்துக் கொலை ஊராட்சி தலைவரின் கணவர் மகன் உள்பட 6 பேர் கைது

கும்பகோணம், பிப்.13: கும்பகோணம் அருகே நெல் அறுவடை செய்வதில் ஏற்பட்ட தகராறில் அறுவடை இயந்திர உரிமையாளரை அடித்துக் கொலை செய்த வழக்கில் ஊராட்சி தலைவரின் கணவர், மகன், தம்பிகள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 பேரை தேடி வருகின்றனர். கும்பகோணத்தை அடுத்த விட்டலூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி மஞ்சுளா. விட்டலூர் ஊராட்சி மன்ற தலைவர். மனோகரனின் உறவினரான திருச்சியை சேர்ந்த அஞ்சம்மாள் என்பவரது இரண்டரை ஏக்கர் நிலத்தில் மனோகரன் தாளடி நடவு செய்திருந்தார். இந்நிலையில் அஞ்சம்மாளுக்கு பணம் தேவைப்பட்டதால், அதே ஊரை சேர்ந்த ரெமோ(50) என்பவரிடம் நிலத்தை விற்றுவிட்டார். இதுபற்றி அறிந்த மனோகரன் தான் நடவு செய்ததை அறுவடை செய்வதாக கூறியபோது நிலத்தை வாங்கி விட்டதால் நான் தான் அறுவடை செய்வேன் என ரெமோ தெரிவித்துள்ளார். மேலும் ரெமோ திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகனிடம் புகார் செய்தார். இந்த புகாரை அடுத்து திருநீலக்குடி இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் நேற்று வயலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை வயலில் நெல் அறுவடை செய்ய இயந்திரத்தை ரெமோ வயலில் இறக்கியபோது, மனோகரனின் ஆட்கள் வயலுக்கு வந்து தகராறு செய்தனர். அப்போது அறுவடை இயந்திரத்தின் உரிமையாளர் நாகை மாவட்டம், மூலங்குடியை சேர்ந்த காளிமுத்து என்பவரை அடித்து கீழே தள்ளியதில், அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள், காளிமுத்துவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்தது. இதையடுத்து திருநீலக்குடி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, மனோகரன்,(51), அவரது மகன் கார்த்தி(27), ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாவின் தம்பிகள் மணி (எ) மணிவண்ணன்(47), இளங்கோ(42), உறவினர் குணசேகரன்(54) அப்துல்(31) ஆகிய 6 பேரை கைது விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 10 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: