நவமலை மின்வாரிய குடியிருப்பில் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

பொள்ளாச்சி, பிப். 12: பொள்ளாச்சியை  அடுத்த நவமலை மின்வாரிய குடியிருப்பில் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.  பொள்ளாச்சியை  அடுத்த நவமலை மற்றும் ஆழியார் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி உலா  வருகிறது. இதில் நவமலையில் உள்ள மலைவாழ் குடியிருப்பு பகுதி மட்டுமின்றி,  மின்வாரிய அலுவலர் வசிக்கும் குடியிருப்புகளிலும் காட்டு யானைகளின்  நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதில் சுமார் 15வயது மதிக்கத்தக்க ஒற்றை காட்டு  யானை, கடந்த சில நாட்களாக ஆழியாரிலிருந்து வால்பாறை மலைப்பாதைக்கு செல்லும்  ரோட்டில் உலா வந்துள்ளது. மேலும், அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து  தென்னை மற்றும் வாழைகளை துவம்சம் செய்ததுடன், வன சோதனை சாவடி தடுப்பு  கம்பிகளையும் சேதப்படுத்தியுள்ளது. மதம் பிடித்ததுபோல் உலாவந்த அந்த காட்டு  யானையை, வனத்துறையினர் வனத்திற்குள் விரட்டியுள்ளனர்.

Advertising
Advertising

ஆனால், தினமும்  மாலை நேரத்தில் மீண்டும் ரோட்டிற்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில்,  நேற்று முன்தினம் மாலை, நவமலை மின்வாரிய குடியிருப்பு பகுதிக்கு, அந்த  ஒற்றை யானை புகுந்தது. அந்த யானை அங்குள்ள ஒரு மரத்தில் இருந்த  மரக்கிளைகளை முறித்து போட்டது. இதையறிந்த அப்பகுதியினர் பீதியடைந்தனர்.  பின் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு,  வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வன ஊழியர்கள் விரைந்து, யானையை  விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அந்த யானை, பல மணிநேரம்  அப்பகுதியில் உள்ள குடியிருப்பை சுற்றிசுற்றி வந்தது. பின் பட்டாசு வெடித்து  அடர்ந்த காட்டிற்குள் விரட்டப்பட்டது. நவமலையில் உள்ள மின்வாரிய  குடியிருப்புக்கு அடிக்கடி காட்டு யானை புகுவதால், அதனை தடுக்க நிரந்தரமாக  வன ஊழியர்களை அமர்த்த வேண்டும்.  இந்த யானையால் மனித உயிருக்கு பங்கம்  ஏற்படுவதற்குள், அடர்ந்த வனத்திலிருந்து மீண்டும் வெளியேறாமல் இருக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: