திருமுல்லைவாயல் நாகம்மை நகரில் கழிவுநீர் குட்டையாக மாறிய ஏரி

ஆவடி, பிப்.11: திருமுல்லைவாயல், நாகம்மை நகர் ஏரியில் கழிவுநீர் கலந்து மாசு ஏற்பட்டு தொற்று நோய்களை பரப்பி வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டில், திருமுல்லைவாயல், நாகம்மை நகர் ஏரி உள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி தேவி நகர், நாகம்மை நகர், ரவீந்திரன் நகர், அந்தோணி நகர், இ.எஸ்.ஐ அண்ணாநகர், ஜெ.பி நகர், ரயில்வே குடியிருப்பு, போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, ஏரி பாசனம் மூலம் பல ஏக்கர் விவசாயம் நடைபெற்றது. இதன் பிறகு, விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி குடியிருப்புகளானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை பொய்த்ததால் ஏரியை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாகம்மை நகர் ஏரியை ஆக்கிரமித்து நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஏரிக்கு வரும் மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் அறவே வருவதில்லை. இதோடு மட்டுமில்லாமல், ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து மெட்ரோ வாட்டர் நிர்வாகம் ராட்சதமேல்நிலைத் தொட்டியும், நீரேற்று நிலையமும் கட்டி உள்ளது. மேலும், ஆவடி நகராட்சி நிர்வாகமாக இருந்தபோது, ஏரியை ஆக்கிரமித்து பூங்கா, வார்டு அலுவலகம், நம்ம டாய்லெட் (கழிப்பறை) ஆகியவற்றையும் கட்டியுள்ளனர்.

தற்போது, அனைத்து ஆக்கிரமிப்பு நீங்கலாக, ஏரி சுமார் 7ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்டதாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பருவமழை சரிவர பெய்யாததால், இந்த ஏரி தண்ணீரின்றி வறண்டு போய் இருந்தது. தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. சமீபகாலமாக, நாகமணி நகர் பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தற்காலிக கால்வாய் வழியாக ஏரியில் விடப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் இருந்தும் செப்டிக் டேங்க் கழிவுகள் மற்றும் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், தற்போது ஏரி கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. ஏரியில் கழிவுநீர் தேங்கி இருப்பதால், சுற்றுப்புற வீடுகளில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏரியை சுற்றிய நாகம்மை நகர், இ.எஸ்.ஐ அண்ணா நகர், காவலர் குடியிருப்பு, அந்தோணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனை அடுத்து, நாகம்மை நகர் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலமுறை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதன்விளைவாக, நாகம்மை நகர் ஏரி நாளுக்கு நாள் பரப்பளவு குறைந்து மாயமாகி வருகிறது. ஏரியில் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, மர்ம காய்ச்சலால் உள்ளிட்ட தொற்று நோய்களை பரப்புகிறது.  எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனித்து திருமுல்லைவாயல், நாகமணி நகர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Related Stories: