சேவை குறைபாடு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு அபராதம்

கோவை, பிப்.11: சேவை குறைபாடு காரணமாக தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை, கீழ்கட்டளையை சேர்ந்தவர் ஜெயபாலச்சந்திரன் (62). இவர் கடந்த 2016 ஜூன் மாதம் கோவைக்கு வந்துள்ளார். அப்போது ஜூன் மாதம் 26ம் தேதி சென்னையில் இருந்து லக்னோ செல்ல இருவருக்கான டிக்கெட்டை ஒரே முன்பதிவில் செய்திருந்தார். ஆனால் திட்டமிட்டபடி செல்ல முடியாததால் கோவை ரயில் அலுவலகத்தில் லக்னோவில் இருந்து சென்னை வர ஒரு நபருக்கான டிக்கெட்டை மட்டும் ரத்து செய்ய படிவம் கொடுத்துள்ளார். ஆனால் ரயில் நிலைய அதிகாரிகள், ஜெயபாலச்சந்திரன் அளித்த படிவத்தை முழுமையாக ஆராயமல் அனைத்து டிக்கெட்களையும் ரத்து செய்துள்ளனர். இது குறித்து ஜெயபாலச்சந்திரன் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் உரிய இழப்பீடு கேட்டு கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த கோவை நுகர்வோர் ஆணைய தலைவர் பாலச்சந்திரன் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட கட்டணமான ரூ.140 ஐ 9 சதவீத வட்டியுடனும், மன உளைச்சலுக்கு ரூ. 5 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ. 3ஆயிரமும் ரயில்வே நிர்வாகம் வழங்க உத்தரவிட்டார்.

Related Stories: