இருபக்கமும் ஆக்கிரமிப்பால் 40 அடி சாலை 20 அடியாக சுருங்கியது

கீழக்கரை, பிப்.7:  கீழக்கரையில் பிரதான சாலைகளில் ஒன்றான வள்ளல் சீதக்காதி சலையில் இரண்டு புறங்களிலும்அகடைகாரர்கள் சாலையில் 10அடி அளவிற்கு பிளாட்பாரம் அமைத்து கொள்வதாலும், டவுன் பஸ்கள் உள்ளே வரமுடியாமல் போகிறது. இதனால் ராமநாதபுரம் செல்பவர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளதால், கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் அந்த பிளாட்பாரத்தில் வைத்தே கடைக்காரர்கள் உணவு தயார் செய்து விற்பனை செய்வதால் அனைவருக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கும், உணவு பாதுகாப்புத் துறைக்கும் பல முறை புகார் அளித்தும் கண்டு கொள்வதில்லை என்று புகார் கூறுகின்றனர். நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை 40 அடி அகலம் கொண்ட சாலை. அது கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பால் 20 அடியாக உள்ளது.   மேலும் சாலையின் ஓரங்களில் கரி அடுப்பை வைத்து பலகாரம் மற்றும் உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர், இதனால் ரோட்டில் உள்ள தூசிகள் அனைத்தும் உணவு பண்டங்களில் படிந்து விடும் வாய்ப்புள்ளது. அந்த பலகாரங்களை மக்களுக்கு விற்பனை செய்வதால் நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து சாலையின் இரண்டு புறங்களிலும் சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வேண்டும் என்றார்

Related Stories: