8 இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி டிஐஜியிடம் புகார் மனு வெளிநாட்டில் அடைத்துவைத்து சித்ரவதை

தஞ்சை, பிப்.4: வெளிநாட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்யப்படும் தனது மகன் உள்ளிட்ட 8 இளைஞர்களை மீட்க வேண்டும் என தந்தை டி.ஐ.ஜி.யிடம் புகார் மனு அளித்தார். பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை வடக்கு ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் அப்பாக்கண்ணு. இவர் நேற்று தஞ்சை டி.ஐ.ஜி.யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் லெனின் பி.காம் முடித்துள்ளான். எனது மகன் கொரியா செல்வதற்கு கடந்த 8 மாதம் முன்பு தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த பீட்டர் ரெத்தினசாமி மகன் ஜான்முத்தை என்ற ஏஜென்டிடம் ரூ.6 லட்சம் பணம் கட்டினேன். எனது மகனோடு சேர்ந்து பள்ளத்தூர் கோபிநாத், தம்பிக்கோட்டை ரஞ்சித், ராஜேஷ், துவரங்குறிச்சி தினேஷ், பட்டுக்கோட்டை விக்னேஷ், கார்த்திக், பெரியக்கோட்டை விக்னேஷ் ஆகிய 7 பேரும் தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.48 லட்சத்தை ரொக்கமாக கட்டினர்.

இவர்கள் அனைவருக்கும் மேற்பார்வையாளர் பணியும், மாதம் ரூ.1 லட்சம் ஊதியம் எனவும் ஆசை வார்த்தை கூறி வேலையில்லா இளைஞர்களின் வறுமையை பயன்படுத்தி ஜான் முத்தையா ஏமாற்றிவிட்டார். அவர் சொன்னது போல் கொரியா நாட்டிற்கு அனுப்பாமல் சம்பந்தம் இல்லாமல் வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளுக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக 8 மாதமாக அடைத்து வைத்துள்ளனர். இது குறித்து எனது மகன் லெனின் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததன்பேரில் நான் தூத்துக்குடிக்கு ஜான்முத்தையா வீட்டிற்கு சென்றேன். அப்போது அவரது மனைவியான ஓய்வு பெற்ற பேராசிரியை ஒரு வாரத்தில் அவர்களுக்கு உரிய வேலை பெற்று தந்துவிடுவோம். இல்லையென்றால் கொடுத்த பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என கூறினார். ஆனால் தற்போது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள் என மிரட்டுகிறார்.

இதற்கிடையில் எனது மகன் மற்றும் 7 பேரையும் அடைத்து கொடுமை செய்து வரும் ஜான் முத்தையா, உனது அப்பனுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் தூத்துக்குடிக்கு எனது வீட்டிற்கு செல்வான். அவனை கூலி படையை ஏவி கொன்றுவிடுவேன் என மிரட்டுவதாக எனது தொலைபேசி மூலம் சொல்லி அழுகிறான். மேலும் எனது மகனையும் அவருடன் தினேஷ் என்பவரையும் தனி அறையில் அடைத்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், எனவே உடனடியாக எங்களை உயிருடன் மீட்க வேண்டும் என தொலைபேசியில் அழுதபடி தெரிவித்தான். எனவே எனது மகன் உட்பட அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் மீட்டு இந்தியா கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அப்பாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: