குடிபோதையில் டூவீலரில் வந்தவரிடம் ரூ.500 லஞ்சம் கேட்ட போலீசார் விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவு

மதுரை, பிப். 4:மதுரையில் குடிபோதையில் டூவீலரில் வந்தவரிடம் ரூ.500 லஞ்சம் கேட்ட போலீசார் மீது விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இது வாட்ஸ்அப்பில் பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி குடிபோதையில் வரும் வாகனஓட்டுனர்களிடம் போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர். அபராத தொகைக்கு முறையாக கணினி பில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் போலீசாரின் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குடிபோதையில் வரும் நபர்களிடம் மதுரை போக்குவரத்து பிரிவு போலீசாரின் வசூல் வேட்டை அம்பலமாகி உள்ளது.

மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் நண்பருடன் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் இவருக்கு ஸ்பாட் பைன் ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்ட நிலையில், அவரின் ஓட்டுனர் உரிமத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அருகிலுள்ள போலீஸ் மையத்திற்கு அவர்களை அழைத்து சென்று அபராத தொகையை பெற்று கொண்ட அவர் ஓட்டுனர் உரிமம் வேண்டுமென்றால் ரூ.500 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டார்.

லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் குடிபோதையில் வந்ததிற்கு ரூ.15 ஆயிரம் வரை அபராதம் போடப்படும் என மற்வொரு போலீசார் மிரட்டியுள்ளார். அப்படி இல்லை எனில் ஜெயிலுக்கு போக வேண்டியாது வரும் மிரட்டியுள்ளனர். இவை அனைத்தும் குடிபோதையில் வந்த நபர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.  அந்த காட்சிகள் அனைத்தும் தற்ேபாது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கமிஷனரிடம் கேட்டபோது, ‘போலீசார் லஞ்சம் வாங்கியது தொடர்பாக புகார்கள் வந்துள்ளது. மேலும் வீடியோ காட்சிகளும் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விசாரணை அறிக்கை வந்தவுடன் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: