20 மூட்டை பருத்தி மாயம் நாமக்கல் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியல்

நாமக்கல், ஜன. 31:நாமக்கல் வேளாண் கூட்டுறவு சங்க குடோனில் வைத்திருந்த 20 பருத்தி மூட்டைகள்  மாயமானதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் பங்கேற்க பல ஊர்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகள் சங்கத்தில் உள்ள சேமிப்பு அறையில் வைக்கப்படும், அதில் 10  மூட்டைகளை நேற்று காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இதுகுறித்து கூட்டுறவு சங்க அலுவலர்களிடம் கேட்டனர். இதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கூட்டுறவு விற்பனை சங்கம் முன்பு திருச்செங்கோடு சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நாமக்கல் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பருத்தி மூட்டைகள் காணாமல் போனது குறித்து விசாரிக்கப்படும் என்றதையடுத்து, மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து பருத்தி ஏலம் வழக்கம்போல் ஏலம் நடந்தது.

Related Stories: