சாயல்குடி, ஜன.31: முதுகுளத்தூர் சாலையிலிருந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கை செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். முதுகுளத்தூர்-கடலாடி சாலையிலிருந்து பிரிந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கை செல்ல சாலை உள்ளது. இச்சாலை ஏனாதி, தேவர்புரம், கொண்டுலாவி, எஸ்.பி.கோட்டை, எஸ்.பி. பட்டி, கூவர்கூட்டம், இறைச்சிக்குளம், சித்திரங்குடி, இலந்தைகுளம், கள்ளிக்குளம், பேரையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு மழை காலங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். ஏனாதியில் பிரசித்திப்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். முதுகுளத்தூர்-கடலாடி சாலையிலிருந்து பிரிந்து செல்லும் விலக்கு ரோடு ஏனாதி வரையிலான சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதிகளில் இருக்கும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து கடலாடி மற்றும் முதுகுளத்தூருக்கு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவர்களும், அனைத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்திற்கும் செல்ல பொதுமக்கள் இச்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
