கடலூர் மாவட்டத்தில் 2,861 ஏக்கர் பயிர் மழையால் பாதிப்பு

கடலூர், ஜன. 30: கடலூர் மாவட்டத்தில் 2019ம் ஆண்டு இறுதியில் பெய்த மழையால் 2,861 ஏக்கர் பயிர்கள்  பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு இடுபொருள் மானிய உதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் வரையில் பெய்தது. இதில், நவம்பர் மாத இறுதியில் பெய்த அதிகப்படியான மழையால் விளை நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததால் நெல் வயல்களில் தேங்கி நின்ற மழை நீர் வடியவில்லை. இதனால்  நெற்பயிருக்கு தேவையான காய்ச்சல் கிடைக்கவில்லை. மேலும் தண்ணீர் விரைந்து வடியாததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிகப்படியான விளைச்சல் இருந்த போதிலும் மகசூல் இல்லாமல் போனது. இதனால் நெல் பயிரிட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். கடலூர் மாவட்டத்தில் வடிகால் மற்றும் வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் அதன் பாதிப்பு வயல்களில் எதிரொலித்தது.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டங்களில் மழையால் நெற்பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டது. இலை சுருட்டு நோய், புகையான் நோய் ஆகியவற்றால் நெற்பயிர் அழிவை சந்தித்துள்ளது. இது போல் கிள்ளை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட  பகுதிகளில் மணிலாவும் விருத்தாசலத்தில் உளுந்து பயிரும் பாதிக்கப்பட்டது. மழையால் இவ்வாறு பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரினர்.

வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறையினர் பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கடலூர் மாவட்ட  விவசாயிகளும், விவசாய சங்கங்களும் மனுக்கள் அளித்தனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதால்  இப்பணியில் முடக்கம் ஏற்பட்டது.தேர்தலுக்கு பின் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தியதை அடுத்து மழையால் வேளாண் பயிர்கள் பாதிப்பு குறித்து தற்போது கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு, அதன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் நெற்பயிர் 1,452 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மணிலா 1,409 ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட 2,990 விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடுபொருள் மானிய உதவி தொகை வழங்கிட அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இதில், உதவித்தொகையாக ரூ.1.54 கோடி வழங்கிட மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தற்போது கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள 2,861 ஏக்கர் நிலங்களுக்கும், பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண்மை துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: