சீசன் இல்லாததால் ஜவுளி சந்தை வெறிச்சோடியது

ஈரோடு, ஜன. 29:  ஈரோடு ஜவுளி சந்தையில் சீசன் இல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு மாநகரில் ஜவுளி சந்தை வாரந்தேறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை நடைபெறும். இந்த சந்தை ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, கனி மார்க்கெட், பழைய சென்ட்ரல் தியேட்டர் பகுதியில் வாரந்தோறும் நடக்கிறது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்து ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து செல்வர். இங்கு தீபாவளி, பொங்கல் பண்டிகையிலும், பள்ளிகள் திறப்பு போன்ற சீசன் நாட்களிலும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும். இந்நிலையில், ஜவுளி விற்பனை சீசன் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால், நேற்று கூடிய சந்தையில் சொற்ப அளவிலான மொத்த வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து சென்றனர். அதேபோல் ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சில்லரை விற்பனையில் ஜவுளி ரகங்களை வாங்கி சென்றனர். இதனால், நேற்று கூடிய சந்தை விற்பனை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து ஜவுளிச்சந்தை (கனிமார்க்கெட்) வியாபாரிகள் கூறியதாவது:

பொங்கல் பண்டிகை சீசன் விற்பனையும் நிறைவடைந்து விட்டதால், வியாபாரிகள் பெரியளவில் இல்லை. கோடை காலம் துவங்கினால் தான் காட்டன் ரக ஜவுளி ரகங்கள் விற்பனை அதிகரிக்கும். அதேபோல், தமிழ் மாதம் மாசி துவங்கினால், கோயில் பண்டிகை விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். இந்த சீசன் விற்பனைக்காக காட்டன் ரகங்களான வேஷ்டி, பனியன், துண்டு, புடவை, சுடிதார் போன்றவை அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்றனர். அடுத்த இரு வாரங்களில் கோடை கால ஆடைகள் விற்பனை துவங்கப்படும், என்றனர்.

Related Stories: