ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு ஆர்.டி.ஓ தலைமையில் மறைமுக தேர்தல்

ஈரோடு,  ஜன. 28:  ஈரோடு மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்  மற்றும் துணை தலைவர், கிராம பஞ்சாயத்து துணை தலைவர் பதவிகளுக்கு ஆர்.டி.ஓ  தலைமையில் வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.   ஈரோடு மாவட்டத்தில்  14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், பஞ்சாயத்து  துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது. இந்த  தேர்தலில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக  நியமிக்கப்பட்டிருந்தனர். இதில், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க  கவுன்சிலர்கள் பங்கேற்காததாலும், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி  ஒன்றியத்தில் நடந்த தேர்தலில் வாக்குப்பெட்டியை அ.தி.மு.க கவுன்சிலர் நாகராஜ்  தூக்கி சென்றதாலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், சென்னிமலையில்  ஊராட்சியில் கொடுமணல் மற்றும் புஞ்சை பாலத்தொழுவு பஞ்சாயத்து துணை  தலைவர்களுக்கான மறைமுக தேர்தலும் பல்வேறு காரணங்களுக்காக  ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், தேர்தல் நடக்காத ஈரோடு, டிஎன்.பாளையம்,  சென்னிமலையில் கிராம பஞ்சாயத்து துணை தலைவர்களுக்கு வரும் 30ம்  தேதி (வியாழன்) மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.  இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு  மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுக தேர்தல் டி.என்.பாளையம்  ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு காலை 10.30 மணிக்கும்,  ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பதவிகளுக்கு மதியம் 3 மணிக்கும் மறைமுக  தேர்தல் நடக்க உள்ளது.

அதேபோல் சென்னிமலை ஊராட்சியில் கொடுமணல் மற்றும்  புஞ்சை பாலத்தொழுவு கிராம பஞ்சாயத்துக்கான துணை தலைவர் பதவிகளுக்கு காலை  10.30 மணிக்கும் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் கடந்த முறை வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாகவும், கூட்டுறவு  இணைப்பதிவாளர்கள் தேர்தல் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், டி.என்.பாளையத்தில் 1வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க  கவுன்சிலர் நாகராஜ் என்பவர் வாக்குப்பெட்டியை தூக்கி சென்றதால் பரபரப்பு  ஏற்பட்டது. இதனால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  இதேபோல், ஈரோடு  ஒன்றியத்தில் 6 கவுன்சிலர் பதவியில் தி.மு.க உறுப்பினர்கள் 3பேரும், அ.தி.மு.க  உறுப்பினர்களும் 3பேரும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தனர்.ஆனால்,  ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க.வினர் மட்டுமே பங்கேற்றனர். இதனால்,  இங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதனால், இந்த முறை நடக்கும் மறைமுக  தேர்தலில் எவ்வித சட்ட விரோத செயலும் ஈடுபடாமல் இருக்க டிஎன்.பாளையம்  ஒன்றியத்தில் கோபி ஆர்.டி.ஓ (வருவாய் கோட்டாட்சியர்) ஜெயராமன் தலைமையிலும்,  ஈரோடு ஒன்றியத்தில் ஈரோடு ஆர்.டி.ஓ முருகேசன் தலைமையிலும் தேர்தல் நடைபெற  உள்ளது. அதேபோல், அசாம்பாவித சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு  போடப்படும். மேலும் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் நடைபெறும் இடங்களிலும் பலத்த  பாதுகாப்புடன் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>