யானை-மனித மோதலை தடுக்க லேசர் சென்சார் சிக்னல் கருவி

சத்தியமங்கலம், ஜன.23: சத்தியமங்கலம் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் வடிவமைத்த லேசர் சென்சார் சிக்னல் கருவி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் பொருத்தப்பட்டது. யானை-மனித மோதலை தடுப்பதற்காக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் பணிபுரியும் ஆராய்ச்சி பேராசிரியர்கள் சஞ்சய் தெப், ராம்குமார், சரவணகுமார் ஆகிய 3 பேர் இணைந்து யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை கண்டறிந்து உடனடியாக செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பும் லேசர் சென்சார் சிக்னல் கருவியை வடிவமைத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் மற்றும் தாளவாடி வனப்பகுதிகளில் பொருத்தினர்.

 

இக்கருவி வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறுவதை அறிந்து வனத்துறையினர் மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பியது. இதையறிந்த மேற்குவங்க மாநிலத்தில் உள்ள புருலியா வனத்துறையினர் லேசர் சென்சார் சிக்னல் கருவிகளை தங்களது வனப்பகுதியில் பொருத்துமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, மேற்குவங்க மாநிலத்திற்கு சென்ற பேராசிரியர் குழுவினர் புருலியா வனப்பகுதியில் யானைகள் வனத்தை விட்டு வெளியேறும் பகுதிகளில் 6 இடங்களில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகளை பொருத்தினர். இந்த கருவிகள் கடந்த 2 வாரமாக நன்கு செயல்பட்டு வருவதோடு யானைகள் அப்பகுதியில் வனத்தை விட்டு வெளியேறும்போது செல்போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பி வருவதாக தெரிவித்தனர்.

Related Stories: