எஸ்.எஸ்.ஐ. கொலைக்கு மூளையாக செயல்பட்டது யார்? தீவிரவாதிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை கேரளா, கர்நாடகம் அழைத்து செல்ல முடிவு

நாகர்கோவில், ஜன.23: குமரி எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 2 தீவிரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரையும் கேரளா மற்றும் கர்நாடகம் அழைத்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிரவாதிகள் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் கோட்டார் மாலிக்தீனார் நகர் பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் போலீசார் கைது செய்தனர். பின்னர் குமரி மாவட்டம் கொண்டு வரப்பட்ட இவர்கள், விசாரணைக்கு பின் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்திலும் (உ.பா.) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் 28 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என, நாகர்கோவிலில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், 10 நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிபதி அருள்முருகன் அனுமதி கொடுத்தார். இதையடுத்து நேற்று முன் தினம் (21ம்தேதி) மாலையில் இருவரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.  நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை தொடங்கியது.  எஸ்.பி. நாத் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். நேற்றும் 2 வது நாளாக விசாரணை நடத்தினார். ஏ.எஸ்.பி.க்கள் ஜவகர், விஸ்வேஸ் பி. சாஸ்திரி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எங்கே? என்ற ரீதியில் தான் விசாரணை நடந்தது. ஆனால் இருவரும் இது தொடர்பான விபரங்களை இன்னும் முழுமையாக தெரிவிக்க வில்லை. வில்சன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டா மற்றும் சம்பவ இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்களை போலீசார் வைத்து இருந்தனர். அதை காட்டி துப்பாக்கி தொடர்பான விபரங்களை கேட்டனர். ஏற்கனவே அப்துல் சமீம் மற்றும் தவுபிக் தொடர்பான சில வீடியோ காட்சிகளை போலீசார் கைப்பற்றி இருந்தனர். அந்த பகுதிகளுக்கு இவர்கள் சென்றது ஏன்? என்பது பற்றியும் விசாரணை நடத்தினர்.

டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பையில் கைதாகி உள்ள பயங்கரவாதிகளுடன் உள்ள தொடர்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் கேட்டுள்ளனர். குறிப்பாக டெல்லியில் தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாக ஐ.எஸ். அமைப்பின் தலைவராக இருக்கும் காஜா மைதீன் (52), அப்துல் சமது (28), சையது அலி நவாஸ் (32) ஆகியோரை என்.ஐ.ஏ போலீசார் கைது செய்து இருந்தனர். இதில் சையது அலி நவாஸ், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆவார். இவர் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களுக்கும், காஜா மைதீனுக்கும் உள்ள தொடர்பு குறித்த விவரங்களை கேட்டனர்.  இதே போல் பெங்களூரில் கைதானவர்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த தாக்குதல் திட்டம் தொடர்பான தகவல்கள் இவர்களுக்கு தெரியுமா? எந்தெந்த நகரங்களில் தாக்குதல் நடத்த இருந்தனர்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். மேலும் எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு தூண்டுதலாக இருந்தது யார்? என்பது பற்றியும் விசாரித்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் அளித்த பதிலில் விசாரணைக்கு தேவையான பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தாக்குதல் தொடர்பான விவரங்கள் எதுவும் தங்களுக்கு தெரியாது என கூறி உள்ளனர். அடுத்த கட்டமாக இவர்களை கேரளா மற்றும் கர்நாடகம் அழைத்து சென்று அங்கு எங்கெங்கு தங்கி இருந்தனர். துப்பாக்கியைபதுக்கி வைத்த இடம் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும், பலத்த பாதுகாப்புடன் இவர்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது. தீவிரவாதிகள் வைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ.க்கு மாற்ற பரிந்துரை

நாடு முழுவதும் பயங்கரவாதிகள் கைதான வழக்குகள், தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஐ. வில்சன் கொலையாளிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டவர்களின் வழக்கும் என்.ஐ.ஏ.க்கு மாறி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளதால், எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கும் என்.ஐ.ஏ.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. வில்சன் கொைல வழக்கு தொடர்புடைய மற்ற வழக்குகள் என்.ஐ.ஏ.க்கு மாறி உள்ளதால், வில்சன் கொலை வழக்கும் என்.ஐ.ஏ.க்கு மாற்றப்படும் என தெரிகிறது. இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, இப்போதைக்கு வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட வில்லை என்றார்.

Related Stories: