ஆரிக்கம்பேடு கிராமத்தில் இடிந்து விழும் ஆபத்தில் குடிநீர் தொட்டி

ஊத்துக்கோட்டை, ஜன. 22:  பெரியபாளையம் அருகே ஆரிக்கம்பேடு கிராமத்தில் பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் குருவாயல் ஊராட்சி ஆரிக்கம்பேடு கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகில் 30 வருடத்திற்கு முன்பு   30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல் நிலை  தொட்டி கட்டப்பட்டது. மேலும் இந்த குடிநீர் தொட்டி அருகில் ரேஷன் கடை, பள்ளிக்கூடம்   ஆகியவை உள்ளது. இந்த குடிநீர் தொட்டியின் தூண்களின் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து கம்பிகள்  எலும்பு கூடுகள் போல் காட்சியளிக்கிறது. தற்போது புதர்களும் மண்டி காணப்படுகிறது. இதனால் புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே பழமை வாய்ந்த  குடிநீர் தொட்டி இடிந்து விழுவதற்குள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : ஆரிக்கம்பேடு பகுதியில் உள்ள பழைய குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை  ஆகியவை உள்ளது. மேலும் மாணவர்கள், ரேஷன் கடைக்கு வருபவர்கள் குடிநீர் தொட்டி அருகில் செல்வதற்கே அச்சத்தில் உள்ளனர். இது ஆபத்தான தொட்டி என்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது.  எனவே இந்த பழைய குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: