திருவள்ளூர் எம்டிஎம் நகரில் சாலையின் நடுவில் மின்கம்பம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருவள்ளூர், ஜன. 22: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட எம்டிஎம் நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சாலையின் நடுவில் இடையூறாக ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பம் எங்கும் இல்லாத அதிசயமாய் சாலையின் நடுவில் இருக்கிறது. இதனால் வேறு வழியின்றி அவசர கோலத்தில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை பொருட்படுத்தாமல் மண்சாலை அமைத்து விட்டனர். சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது.

புதியதாக இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிள்களில் வருவோர், இந்த மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.  சாலையின் நடுவே மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றுவதன் அவசியம் குறித்து அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், சாலையின் நடுவே இருக்கும் மின்கம்பத்தை அகற்றி ஓரமாக நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: