கும்பகோணம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்கள் கைது

கும்பகோணம், ஜன. 22: கும்பகோணத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் 2 வியாபாரிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணத்தில் கடந்த 20ம் தேதி அதிகாலையில் சுவாமிமலையை சேர்ந்த காய்கறி வியாபாரியான முகம்மது சலிம் மற்றும் திம்மக்குடியை சேர்ந்த மீன் வியாபாரியான சங்கர் ஆகியோரை பைக்கில் குரங்கு குல்லா அணிந்து வந்த கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி பணத்தை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருவரும் தாலுகா மற்றும் கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதைதொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் கருணாகரன், குற்ற தடுப்பு பிரிவு எஸ்ஐ கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

இதையடுத்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தாராசுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்த அமுல்தாஸ் மகன் அலெக்ஸ் (22), வளையபேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் முகேஷ் (20), அம்மாபேட்டை குடியான தெரு உலகநாதன் மகன் ஜெகதீஷ் (20), தாராசுரம் மிஷின் தெரு ஆனஸ்ட்ராஜ் மகன் அடால்ட் ஹிட்லர் (19) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும், செல்போன் மற்றும் வழிப்பறி செய்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

கடந்த 20ம் தேதி காலையில் முகமூடி அணிந்து வந்து பணத்தை மட்டும் வழிப்பறி செய்தவர்களை பற்றி பழைய குற்றவாளிகளிடம் விசாரித்தோம். அப்போது இவர்கள் நான்கு பேரும் திருப்பூர், கோயம்புத்தூர் பகுதிகளில் வேலை பார்த்து விட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளனர் என தெரிவித்தனர்.அதன்பிறகு அவர்கள் 4 பேரையும் விசாரித்தபோது அவர்கள் மேல் கும்பகோணம் தாலுகா, கிழக்கு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு இருப்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களை தேடியபோது கும்பகோணம் ரயில் நிலைய தண்டவாளத்தின் மறைவான பகுதியில் ஒரு ஒரமாக மதுபோதையில் படுத்திருந்தனர். அப்போது அவர்களை கைது செய்தோம். 4 பேரும் கொடுத்த தகவலின்பேரில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களது கூட்டாளிகளான மேலும் இருவரை தேடி வருகிறோம் என்றார். வழிப்பறி சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: