பள்ளி பரிமாற்ற திட்டம் நகர்புற பள்ளிகளுக்கு வந்த கிராமப்புற மாணவர்கள்

நாகர்கோவில், ஜன.22: பள்ளி பரிமாற்ற திட்டத்தில் நகர்புற பள்ளிகளில் கிராமப்புற மாணவர்கள் வருகை தந்து கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். பள்ளி பரிமாற்ற திட்டத்தில் குலசேகரபுரம் மற்றும் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் தலா 20 பேர் வீதம் என்று மொத்தம் 40 பேர் பங்கு பெற்ற சிறப்பு நிகழ்வு நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. குலசேகரபுரம் அரசு உயர்நிலை பள்ளி மாணவ மாணவியர் 20 பேர் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளிக்கு வருகை தந்த நிலையில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் தயாபதி நளதம் பள்ளிக்கு வந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் வரவேற்றார்.

மேலும் மாணவர்களிடையே சகோதரத்துவம், ஒற்றுமை உணர்வு மேலோங்கும் விதமாக மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், அறிவியல் சார்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாணவர்கள் நாகர்கோவிலில் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்ற செயல்பாடுகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளமைய பயிற்றுநர் பிரமிளா ஜினி, பள்ளி ஆசிரியர்கள் புஷ்பலதா, செல்வி, லிஸி, ஸ்டைலி, சந்திரன், வேலவன், சண்முகம், ஜார்ஜ், வினி உள்ளிட்ட ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ மாணவியருக்கு இந்த நிகழ்வின் நினைவாக மரக்கன்று ஒன்றும் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், ‘அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் மாணவர்கள் தாம் படிக்கும் பள்ளியின் பல்வேறு விவரங்களையும், கற்றல் அனுபவங்களையும், தங்கள் கருத்துக்களையும் பிற பள்ளி மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக கிராமப்புற பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் 20 மாணவர்கள் நகர்புற பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் இணைந்து கற்கும் வகையில் பள்ளி பரிமாற்றம் திட்டம் என்ற புதிய திட்டம் 2017-18ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் மாவட்டத்திற்கு 13 கிராமப்புற பள்ளியை சார்ந்த மாணவர்கள் 13 நகர்புற பள்ளியை சார்ந்த மாணவர்களுடன், மாதம் ஒரு முறை அவர்கள் பள்ளிக்கு சென்று, கற்றல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது நகர்புற பகுதிகளில் உள்ள மாணவர்களின் செயல்பாடுகள், கற்றல் சிறப்புகள் தொடர்பாக கிராமப்புற மாணவர்கள் அறிந்துகொள்ள இயலும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்வு மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்றது. நாகர்கோவில் கோட்டார் கவிமணி பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் கலந்துகொண்டு பேசினார். ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலர் மரிய பாக்கியசீலன், பள்ளி தலைமை ஆசிரியர் நல்ல பாக்கியலெட், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: