திருச்சியில் 31வது சாலை பாதுகாப்பு வாரவிழா துவக்கம் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜன.21: திருச்சியில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் பொது மேலாளர் ராஜ்மோகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில், சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஜனவரி 20 முதல் 27ம்தேதி வரை ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிலைகளில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நேற்று மகளிர் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து பேரணியாக மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தலைமை தபால் நிலையம் வழியாக மாநகராட்சி வரை நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி , மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது. ஜனவரி 22ம்தேதி அப்பல்லோ மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. 23ம் தேதி பிஷப்ஹீபர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் முதலுதவி குறித்த பயிற்சி நடைபெறவுள்ளது.

வருகிற 24ல் சோமரம்பேட்டை வயலூரில் கிராமபுற மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், வருகிற 25ல் விபத்தில்லா திருச்சி பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், சமயபுரம் சுங்கச்சாவடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன. வருகிற 27ம்தேதி நிறைவுநாள் விழாவில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியும், 25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணி புரிந்த ஓட்டுநர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும், ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிலைகளில் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடகிருஷ்ணன், (திருச்சி மேற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், (ரங்கம்), காவல்துறை உதவி ஆணையர் அருணாசலம் (திருச்சி வடக்கு), காவல்துறை உதவி ஆணையர் விக்னேஷ்வரன் (திருச்சி தெற்கு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: