அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

ஈரோடு, ஜன.21: ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்களை நிரப்பும் வகையில் அத்திக்கடவு, அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக, ரூ.1,652 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு பிப்.28ம் தேதி துவக்கி வைத்தார். அத்திக்கடவு, அவிநாசி திட்டத்திற்காக முதல் நீரேற்று நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் பவானி ஆற்றில் அமைய உள்ளது. இந்த இடத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கனவு திட்டமான அத்திக்கடவு, அவிநாசி திட்டம் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும். பவானி ஆற்றின் உபரி நீரினை கொண்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதே இத் திட்டத்தின் நோக்கம். பவானி ஆற்றின் உப நதிகளும், பவானி ஆறும் ஒன்றாக சேர்ந்து 225 கி.மீ. பாய்ந்து சென்று பவானி ஆற்றின் கடைசி அணைக்கட்டான காலிங்கராயன் அணைக்கட்டை அடைந்து அதன்பின் உபரிநீர் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 1.5 டி.எம்.சி நீரை ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியான பகுதிகளில் உள்ள 1,044 குளம் மற்றும் குட்டைகளை குழாய்கள் மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரியாக வெளியேறும் நீரை சுமார் 70 நாட்களில் வினாடிக்கு 250 கனஅடி வீதம் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு குளம், குட்டைகளை நிரப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. அணை நாசுவம்பாளையம், நல்லகவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூட்டி மற்றும் அன்னூர் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.  காலிங்கராயன் தடுப்பணையின்கீழ் கட்டப்படும் புதிய தடுப்பணை மூலம் திருப்பப்படும் நீரை 2.20 மீட்டர் விட்டமுள்ள மைல்டு ஸ்டீல் குழாய்கள் மூலம் சுமார் 40 கி.மீ. வரையிலும், விட்டம் குறைவாக உள்ள குழாய்கள் மூலம் கடைசி வரையும் நீர் கொண்டு செல்லப்படும். குளம், குட்டைகளுக்கு வழங்கப்படும் நீரானது கம்ப்யூட்டர் மூலம் செயல்படும் வெளியேற்று நீர் மேலாண்மை அமைப்பு மூலம் இயக்கப்பட உள்ளது. இந்த அமைப்பானது சூரியஒளி சக்தி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு மொத்த அமைப்பும் ஸ்கேடா மூலம் இணைக்கப்பட்டு அனைத்து குளம், குட்டைகளுக்கும் முறையான பகிர்மானம் செய்யப்பட உள்ளது. இந்த அமைப்புகளுக்கு இடையே உள்ள தொலை தொடர்பு இதற்கென தனியாக அமைக்கப்பட்ட கம்பியில்லா தகவல் தொடர்பு மூலம் இணைக்கப்பட்டு தலைமை கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இந்த ஆய்வின்போது கலெக்டர் கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, ராமலிங்கம், ராஜாகிருஷ்ணன் உள்பட உடனிருந்தனர்.

Related Stories: