1,374 மையங்கள் மூலமாக 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

ஈரோடு, ஜன. 20:  ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. அதன்படி ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையம் காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இம்முகாமிற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன்முன்னிலை வகித்தார். போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது குறித்து கலெக்டர் கதிரவன் கூறியதாவது: போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயை தடுக்க நாடு தழுவிய அளவில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 1995ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிறது. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 374 மையங்கள் அமைக்கப்பட்டு 2 லட்சத்து ஆயிரத்து 589 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த முகாமில் 5 ஆயிரத்து 496 பணியாளர்களும், 184 மேற்பார்வையாளர்களும், மாவட்ட அளவில் 9 சிறப்பு குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு இரண்டு நாட்கள் வீடு, வீடாக சென்று பார்வையிட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. மேலும் பஸ் ஸ்டாண்ட், ரயில்நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. போலியோ பாதித்த குழந்தைகள் இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, ராமலிங்கம், ராஜாகிருஷ்ணன், தனியரசு, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் ரவிச்சந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, உதவி ஆணையர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோபி:  கோபி  பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு  சொட்டு மருந்து வழங்கினார். சிறுவலூர் வட்டார அளவில், பஸ் நிலையம், அரசு  மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து  நிறுத்தம், பள்ளிகள் என 82 இடங்களில் 14 ஆயிரத்து 217 குழந்தைகளுக்கு  சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணியில் சுகாதாரத்துறை, அங்கன்வாடி  பணியாளர்கள் 343 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பேருந்து நிலையத்தில் நடந்த  போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி தலைவர்  சிந்து ரவிச்சந்திரன், சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார்,  ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், டாக்டர்.பாலமுருகன், முன்னாள் இணை  இயக்குனர் டாக்டர்.ஆண்டமுத்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: