விராலிமலை, திருமயத்தில் தூய்மை இந்தியா வலியுறுத்தி சைக்கிள் ஊர்வலம்

விராலிமலை, ஜன. 20: விராலிமலையில் ஆரோக்கிய இந்தியாவை வலியுறுத்தி பிட் இந்தியா சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விராலிமலை ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த சைக்கிள் ஊர்வலத்தை விராலிமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் பேரணியை துவக்கி வைத்தனர். பேரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி தேரோடும் வீதி வழியே வலம் வந்து மீண்டும் ஊராட்சிமன்ற அலுவலகத்தை அடைந்தது. இதில் தூய்மை இந்தியாவை உருவாக்குவோம், மரங்களை நடுவோம், புகை வெளியே வெளிபடுத்தும் வாகனங்களை தவிர்த்து சைக்கிள் பயணத்தை மேற்கொள்வோம், புவி வெப்பமாதலை தடுப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியடி சென்றனர்.

இதில் விராலிமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபன் சக்கரவர்த்தி, விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளி தாளாளர் மோகன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருமயம்: திருமயம் ஊராட்சி சார்பில் ஆரோக்கிய இந்தியா குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்பு ஏற்படுத்தும் வகையில் நேற்று சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை திருமயம் ஒன்றியக்குழு தலைவர் ராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் இந்தியாவில் ஊட்ட சத்து குறைபாடுகளால் பலர் உடல் ஆரோக்கியம், சந்தோஷத்தை இழக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியில் கோஷமிட்டனர். பேரணி திருமயம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடங்கி தகர கொட்டகை, கடை வீதி, தாலுகா அலுவலம், திருமயம் பஸ் ஸ்டாண்டு, எஸ்பிஐ வங்கி வழியாக மீண்டும் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தது. இதில் திருமயம் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: