தேசிய நெடுஞ்சாலையில் இன்சூரன்ஸ் எடுக்காமல் செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பரமத்தி, ஜன. 19: தேசிய நெடுஞ்சாலையில் இன்சூரன்ஸ் எடுக்காத நான்கு சக்கர வாகனங்கள் மீது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி, அனைத்து மோட்டார் வாகனங்களும் இன்சூரன்ஸ் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தி வரும் வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, அந்த வாகனத்தில் பயணிக்கும் பயணியோ அல்லது விபத்துக்குள்ளாகும் வாகனத்தால் பாதிக்கப்படும் பிற பயணியோ காப்பீடு பெற்றுக் கொள்ள முடியும். க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள மூன்று காவல் நிலையங்களில் வருடத்திற்கு சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

இதில் விபத்துக்குள்ளாகும் போது, பாதிப்புக்குள்ளாகும் நபர் விபத்தை ஏற்படுத்தியவர் மீது வழக்கு தொடர்ந்து, தனக்கான இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வழியுள்ளது. ஆனால் க.பரமத்தி ஒன்றியத்தில் கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார், வேன், மினி ஆட்டோக்கள் மட்டுமல்லாது குறிப்பாக ஜல்லி லாரிகள் இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தாமலேயே வாகனத்தை சிலர் ஓட்டி வருவதாகவும் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீசார் இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு தரும் முக்கியத்துவத்தை நான்கு சக்கர ஜல்லி லாரி வாகனங்களுக்கு இன்சூரன்சுக்கு தருவதாக இல்லை என பலரால் கூறப்படுகிறது. இதனால் இன்சூரன்ஸ் இல்லாத லாரி, கார், வாகனங்கள் மூலம் விபத்து ஏற்படும் போது பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு கிடைக்காத நிலை உள்ளது. எனவே மாவட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஜல்லி லாரி வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இன்சூரன்ஸ் எடுக்காத ஜல்லி லாரி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: