ஊருக்குள் பஸ் வராமல் நள்ளிரவில் நடுவழியில் இறக்கி விடப்படும் பயணிகள் போக்குவரத்து துறை கவனிக்குமா?

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.14:  ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்திற்குள் இரவு நேரங்களில் வராத பேருந்துகளால் பயணிகள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இரவில் அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில் ரீதியாகவும், வேலை வாய்ப்புக்காகவும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரிய மருத்துவமனைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது  இந்த ஊருக்கு  சுமார் 50க்கும் மேற்பட்ட  பேருந்துகள்  வந்து செல்கின்றன. இங்கு மருத்துவ மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம், மதுரை, காரைக்குடி,தேவகோட்டை  போன்ற பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. பொதுவாக பகல் நேரங்களில் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

ஆனால் இரவு நேரங்களில் ஊருக்குள் உள்ள பேருந்து நிலையத்திற்கு வராமல் பெரும்பாலான பேருந்துகள் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது. இதனால் பெண்கள்,குழந்தைகள், வயதான முதியவர்கள் இரவு நேரங்களில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு முன்னரே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு சென்று வருகின்றனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த பகுதியில் இறங்கி நடந்து செல்வதும் பாதுகாப்பற்றதாக கருதி பயணிகள் ஒரு விதமான அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்துகள் அனைத்தும் ஆர்.எஸ்.மங்கலம் ஊருக்குள் வந்து செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து  கவிதா கூறுகையில், இரவு நேரங்களில் வெளியூர்களுக்கு சென்று திரும்பும் பொதுமக்களை தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விட்டு சென்று விடுகிறார்கள். இங்கிருந்து வீடுகளுக்கு செல்லுவது பயமாக உள்ளது. காரணம் சில நேரங்களில் தெருவிளக்குகள் கூட இல்லாமல் இருட்டாக உள்ளது. அவ்வாறான நேரங்களில் என்னைப் போன்ற பெண்கள் குழந்தைகளுடன் வருவதற்கு அச்சமாக உள்ளது. ஆங்காங்கே வழிப்பறி மற்றும் திருடு நடைபெறும் சூழலில் பகல் நேரங்களில் ஊருக்குள் வரும் பஸ், இரவு நேரங்களில் ஊருக்குள் வர மறுப்பது ஏன் என ஒன்றும் புரியவில்லை. பல நேரங்களில் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்ய வேண்டிய சூழல் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களாகிய எங்களின் நலன் கருதி கலெக்டர் நடவடிக்கை எடுத்து அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றார்.

Related Stories: