பண்ருட்டி பகுதியில் காலிபிளவர் அறுவடை தீவிரம்

பண்ருட்டி, ஜன. 14: பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை, கட்டமுத்துபாளையம், பூண்டி, க.குச்சிபாளையம், சின்னப்பேட்டை, பண்டரக்கோட்டை மற்றும் மேட்டாமேடு ஆகிய பகுதிகளில் காலிபிளவர் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிழல்வலை முறையில் நாற்றங்காலில் காலி பிளவர் விதைகளிட்டு வளர்க்கப்படுகின்றன. அதன்பிறகு 25 நாட்கள் கழித்து காலிபிளவர் செடியை பிடுங்கி நிலத்தில் நடுகிறார்கள். தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வரும் நிலையில் 3 மாதத்தில் விவசாயிகள் காலிபிளவரை அறுவடை செய்கின்றனர்.

இதுகுறித்து க.குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி முத்து கூறுகையில், காலிபிளவரில் அதிகமாக மருத்துவ குணம் இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் விவசாயிகள் அதிகளவில் காலிபிளவர் பயிரிடுகின்றனர். மேலும் காலிபிளவர் அறுவடை காலம் குறைவாக இருந்தாலும், விலைவாசி ஏற்றத்தால் பராமரிப்பு செலவினங்கள் அதிகமாக இருக்கிறது. அறுவடை செய்த காலிபிளவரை மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் குறைவான விலைக்கு எடுத்து கொள்கிறார்கள். இதற்காக செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. இதன் காரணமாக பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு விவசாயிகளின் விளை பொருட்களை விற்பதில் நஷ்டம் அடையாமல் இருக்க மானிய விலையில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: