நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும்

ஈரோடு, ஜன. 13:  தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திரராசு கூறியுள்ளதாவது: சர்க்கரை ஆலைகள் பதிவு செய்த விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்பிற்கு கடந்த 6 மாதமாக பணம் வழங்காமல் உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் பலநூறு கோடிகளை ஆலை நிர்வாகங்களுக்கு வழங்கியுள்ளது. ஆலைகளின் நலன் கருதி இறக்குமதி சர்க்கரைக்கு 100 சதவீத வரியும் விதித்துள்ளது. இதனால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் அரசு எவ்வளவு சலுகை அளித்தாலும், விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆலை அலுவலகத்திலோ அல்லது ஆலையிலோ உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். ஈரோடு மாவட்டத்தில் தற்போது தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணி நடந்து வருகிறது.

மேலும், பொங்கல் பண்டிகைக்கு பிறகு கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகளிலும் அறுவடை துவங்கும். தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் முதல் ரூ.1.25 முதல் தாறுமாறாக வசூல் செய்கின்றனர். இதை தடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு உண்டான கூலி தொகையை தகவல் பலகை வைத்து தெரிவிக்க வேண்டும்.

ஆட்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வேபிரிட்ஜ் வாகன எடை செய்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நெல் மூட்டைக்கு உரிய கூலி தொகையை கொள்முதல் தொகையில் கழித்து நேர்மையாக வழங்க வேண்டும். கொள்முதல் தொகையை கிலோவிற்கு ரூ.25 உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த முறை திறக்கப்பட்ட தண்ணீர் கீழ்பவானி பாசன பகுதிகளில் 15 சதவீதம் விளைச்சல் காணாமல் போனது. அப்பகுதிகளுக்கு வரும் 31ம் தேதி வரை தேவைப்படும் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: