ஊட்டி அரசு கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

ஊட்டி, ஜன.10: பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஊட்டி அரசு கலை கல்லூரியில் உள்ள நுண்கலை மன்றம் சார்பில் நேற்று கல்லூரி வளாகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வனவிலங்கு உயிரியல்துறை தலைவர் எபினேசர் முன்னிலை வகித்தார். விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழர்களின் பராம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர்.  பறையிசையுடன் விழா துவங்கியது. விழாவில் தை பொங்கல் விழாவானது தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகில் தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. வேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பண்டிகையாக விளங்குகிறது என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற கரகாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் நுண்கலை மன்ற ஒருங்கிைணப்பாளர் பிரவீணாதேவி மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: