வேலூர் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சதுப்பேரி குப்பை கிடங்கை அகற்றுவதில் இழுபறி

வேலூர், ஜன.8: வேலூர் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சதுப்பேரி குப்பை கிடங்கை அகற்றுவதில் இழுபறி நிலை நீடிப்பதால் 2 ஆண்டு கால பிரச்னைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி, சத்துவாச்சாரி, வேலூர், சேண்பாக்கம் உள்ளிட்ட 4 மண்டலங்களில் 60 வார்டுகளில் இருந்து அகற்றப்படும் 150 டன் குப்பைகள் வேலூர் அடுத்த சதுப்பேரியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. மலைபோல் குவிந்த குப்பைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசியதுடன் தொற்று நோய் பரவும் அச்சம் ஏற்பட்டது. மேலும், நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்பட்டது. இதனை கண்டித்து சதுப்பேரி உட்பட 5 கிராம மக்கள் போராட்டங்களில் இறங்கினர். மேலும், சதுப்பேரியில் குப்பைகள் கொட்டவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகரின் பல இடங்களிலும் குப்பைகள் அகற்ற முடியாமல் சாலையோரங்களில் தேங்கின.

இதற்கிடையில் சதுப்பேரி கிராம மக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் சதுப்பேரி கிடங்கில் குப்பை கொட்ட தடை விதிக்க வேண்டும். மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதுப்பேரி குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அகற்ற வேண்டும், என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி, தற்போது வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் திடக்கழிவு மையங்கள் அமைக்கப்பட்டு குப்பைகள் தரம் பிரித்து அகற்றப்பட்டு வருகிறது. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் அரியலூரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போது குப்பை அகற்றும் பிரச்னை தீர்வு காணப்பட்டுள்ளது.

இதனிடையே பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி சதுப்பேரியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கென ₹13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குப்பைகள் அகற்றும் பணியில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. வெளிநாட்டில் இருந்து இயந்திரங்கள் வந்தவுடன் குப்பை அகற்றும் பணிகள் தொடங்கும். மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அகற்றப்படும். அந்த இடத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும், என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் இதுநாள் வரையிலும் தொடங்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி விரைவில் சதுப்பேரியில் குப்பைகள் அகற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்பட்டதால் சுற்றுச்சூழல் மாசு, தண்ணீர் மாசு, சுகாதார சீர்கேடு போன்ற பாதிப்புகள் தொடர்கிறது. இதனால் சதுப்பேரி குப்பை கிடங்கு பிரச்னைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று தெரியவில்லை’ என்று வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சதுப்பேரி குப்பை கிடங்கை அகற்றும் பணிக்காக ஒப்பந்தம் போடப்பட்ட நிறுவனம் வெளிநாட்டில் இருந்து அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்களை வாங்கியுள்ளது. அவை கப்பல் மூலமாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இயந்திரங்கள் கிடங்கில் பொருத்தியவுடன் குப்பை அகற்றும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

Related Stories: