வைகுண்ட ஏகாதசி வீரராகவ பெருமாள் கோயிலில் ெசார்க்கவாசல் திறப்பு

திருவள்ளூர், ஜன.7: பெருமாளின் திருவடியை சரண் அடைந்த உயிர், எப்படி வீடு பேற்றை அடையும் என்பதை, பெருமாளே விளக்கி காட்டும் நிகழ்ச்சி தான் சொர்கவாசல் திறப்பு. இதில், நம்மாழ்வாருக்கு பெருமாள் காட்சி கொடுப்பார். திருவள்ளூரில் உள்ள முக்கிய பெருமாள் கோயிலான வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது கோயிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘’கோவிந்தா, கோவிந்தா’’ என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், காக்களூர் பூங்கா நகர் சிவ - விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீஜலநாராயணர் சன்னதியில், அதிகாலை 4 மணிக்கு பூப்பந்தலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சொர்க்கவாசல் தரிசனம் நடைபெற்றது.

இதேபோல், நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில், நேற்று அதிகாலை 5 மணிக்கு உற்சவர் லட்சுமி நரசிம்மர் அலங்கரிக்கப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. தொடர்ந்து திருவீதியுலா நடைபெற்றது. இதேபோல் பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயில் உட்பட பல்வேறு பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

Related Stories: