பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண் போலீசார் கொண்ட ‘பிங்க் ஸ்கோட்’ விழிப்புணர்வு வாகனம் வேலூர் சரக டிஐஜி தொடங்கி வைத்தார்

வேலூர், ஜன.7: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண் போலீசார் கொண்ட ‘பிங்க் ஸ்கோட்’ விழிப்புணர்வு வாகனத்தை வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி காமினி நேற்று தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ‘பிங்க் ஸ்கோட்’ வாகன தொடக்க விழா நேற்று நடந்தது. டிஐஜி காமினி தலைமை தாங்கி வாகனத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்ைககள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘பிங்க் ஸ்கோட்’ எனும் விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 15 வாகனங்கள் உள்ளன. வேலூரில் எஸ்பி ஆலோசனையின் பேரில் இன்று(நேற்று) தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழக பெண்கள் வீரமானவர்கள்தான். ஆனால் மாறி வரும் சமூக மாற்றத்தால் சிறிய சலசலப்புகள் ஏற்படுகிறது.

பெண்களுக்கு பாலியல் தொடர்பான கொடுமைகளில் இருந்து பாதுகாத்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பெண் இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் இருப்பார்கள். இவர்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுரிகளுக்கு சென்று பாலியல் தொடர்பான புகார்கள் காவல்நிலையத்தில் எப்படி தருவது என்பது உள்ளிட்ட பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மேலும் பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட எஸ்ஓஎஸ் காவலன் ஆப்ஸ் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இந்த பணி முடிந்தபின் மாவட்டம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் நிலுவையில் எத்தனை உள்ளது என்று கணக்கிடப்பட்டு அதன்மீது உரிய விசாரணை நடத்தப்படும். மாணவிகள், பெண்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது இன்ஸ்பெக்டர்கள் அசோகன், அன்பரசி, சோனியா, புனிதா, எஸ்ஐ நாகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் ஈ.வெ.ரா. பள்ளி மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர் முன்னதாக அவர்களுக்கு பிங்க் ஸ்கோட் குழு பெண் போலீசார் எஸ்ஓஎஸ் காவலன் ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: