வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் வாபஸ் கண்காணிப்பாளர் சமரசம்

வேலூர், டிச.31:வேலூர் மத்திய சிறையில் 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகனிடம் சிறை கண்காணிப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப்பொருட்களை சிறைக்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து கடந்த 21ம் தேதி முதல் முருகன் வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். சிறைத்துறை சார்பில் வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து, பழங்கள் மட்டும் உண்டு வந்தார்.

9வது நாளான நேற்று முன்தினம் காலை முதலே பழங்கள் மற்றும் உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதத்தை தீவிரப்படுத்தினார். இதனால் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது, முருகன் முன்பு தானே சமைத்து சாப்பிட்டு கொண்டு இருந்ததை போல, இப்போதும் சமைத்து சாப்பிட அனுமதி வழங்க வேண்டும். மனைவி கொடுக்கும் உணவை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளை ஏற்பதாக சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் உறுதி அளித்தார். இதை ஏற்று முருகன் இளநீர் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: