திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆதிசிதம்பரம் பொற்சபையை மறைத்து தகரக் கொட்டகை அமைக்கும் பணி

சீர்காழி, டிச.30: சீர்காழி அருகே சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆதி சிதம்பரம் பொற்சபையை மறைத்து ஆகம விதிகளுககு எதிராக தகரசெட் அமைக்கப்பட்டு வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சுவேதாரண்யேஸ்வரர் உடனாகிய திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவக்கிரங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் காசிக்கு இணையான சூரியன், சந்திரன், அக்னி தீர்த்தக் குளங்கள் அமைந்துள்ளன. இந்த குளங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முக்குளங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் உற்சவர் அகோரமூர்த்தி, மூலவர் அகோர மூர்த்தி சன்னதி இடையே அமைந்துள்ள ஆதி சிதம்பரம் பொற்சபையை மறைத்து தற்காலிக தகர செட் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தகர செட் அமைப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தகர செட் அமைப்பதால் மழைக்காலங்களில் காற்று அடிக்கும்போது தகர செட் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த தகர செட் அமைக்கும் பணி தனியார் மூலம் நடைபெறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கோயில் நிர்வாகம் மூலம் தகர செட் அமைக்க அனுமதி அனுமதி பெறப்பட்டதா என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தக் கோயிலில் ஏதேனும் பணிகள் செய்ய வேண்டுமானால் தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது,  இதனை மீறி தகர செட் அமைக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகம விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்படும் நகர செட் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: