சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு 17ம்தேதி முதல் கோடைகால சிறப்பு ரயில்

நாகப்பட்டினம், மே 12: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணி வருகைதருகின்றனர். வேளாங்கண்ணி வருகை தரும் சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள பஸ் வழியாகவே பயணம் செய்ய வேண்டியது உள்ளது. இதனால் கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் சென்னை எழும்பூரில் இருந்து நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு வரும் 17ம் தேதி முதல் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதன்படி வரும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.50மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.30மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். அதேபோல் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 2.45 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு இரவு 11.30 மணிக்கு சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில்வே ஸ்டேசன்களில் நின்று செல்லும். இந்த கோடை கால சிறப்பு ரயில் வரும் 17ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 1 ம்தேதி வரை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

The post சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு 17ம்தேதி முதல் கோடைகால சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Related Stories: