கருங்கல் அருகே தொழிலாளி கொலை கூலிப்படையை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு விசாரணையில் பகீர் தகவல்கள் அம்பலம்

கருங்கல், டிச. 29: கருங்கல்  அருகே கட்டிட தொழிலாளி கொலையில் கூலிப்படை ஈடுபட்டிருப்பது விசாரணையில்  தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் கருங்கல்   அருகே உள்ள சகாயநகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர்(48). வெளிநாட்டில்   கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் 5 மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்து, தாயுடன்   வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு புங்கைகுளம்கரை பகுதியில் வைத்து ஒரு கும்பல் அவரை வெட்டி கொலை  செய்தது.

கருங்கல் போலீசார் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம்  மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு  சோதனை நடந்தது. அது சிறிது தூரம் ஓடிவிட்டு மெயின் ரோட்டில் வந்து நின்றது.  

இதனிடையே குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஷ் சாஸ்திரி தலையிலானபோலீசார்  சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தினர். இக்கொலை  தொடர்பாக அலெக்சாண்டரின் சகோதரி மேரி சுனிதா(38) கருங்கல் போலீசில் புகார்  செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.முதல்கட்ட  விசாரணையில், அலெக்சாண்டர் இரவு 8 மணியளவில் தனது சகோதரி மேரி சுனிதா  வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவரது கணவர் பெர்னாண்டஸ் பைக்கை எடுத்து  கொண்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புகையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கழுத்து, தலை, மார்பு உள்பட 7  இடங்களில் சரமாரி வெட்டு விழுந்துள்ளது. மேலும் கொலை நடப்பதற்கு முன்பாக  முதலில் கும்பல் அலெக்சாண்டர் மீது மிளகாய் பொடியை தூவி நிலைதடுமாற  செய்துள்ளனர். கீழே விழுந்த அவரை சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர். எனவே இது  திட்டமிட்ட கொலை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த கொடூர கொலையை கூலிப்படையினர்  அரங்கேற்றி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து  போலீசார் சம்பவ இடத்திற்கு சற்று தொலையில் உள்ள ஒரு சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை  ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஒரு இடத்தில் ஒரு பைக் மாறி மாறி சுற்றி  வருவதும், மற்றொரு இடத்தில் 2 பைக்குகள் சுற்றி வருவதும் பதிவாகி உள்ளது.  அந்த பைக்குகளில் வந்தவர்களுக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு உண்டா என்ற  கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர கருங்கல்  பகுதியில் பலர் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். இவர்களிடையே கொடுக்கல்,  வாங்கலில் ஏதேனும் தகராறு உள்ளதா? அந்த முன்விரோதத்தில் கூலிப்படையை ஏவி  அலெக்சாண்டர் கொலை செய்யப்பட்டாரா? என்ற  கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஏஎஸ்பி விஸ்வேஷ் சாஸ்திரி கூறியதாவது:  கொலை எதற்காக நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து  வருகிறோம். தடயங்களையும் சேகரித்து வருகிறோம். குற்றவாளிகளை பிடிக்க  தனிப்படை எஸ்ஐ ஜாண்போஸ்கோ, கருங்கல் எஸ்ஐ மோகன அய்யர் தலைமையில் 2 தனிப்படைகள்  அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றார்.

ரத்தம் சொட்ட சொட்ட வந்த 2 பேர்

சம்பவம்  நடப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக  கருங்கல் காவல் நிலையத்திற்கு 2 பேர்  ரத்தம் சொட்ட சொட்ட வந்தனர். அவர்கள் தாங்கள் வெள்ளியாவிளை பகுதியில் வந்த  போது, ஒரு கும்பல் தங்களை வெட்டிவிட்டு தப்பி சென்றதாகவும்,  எதற்கு வெட்டினார்கள் என்று தங்களது தெரியாது என்றும் தெரிவித்தனர்.  அவர்களை போலீசார் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி  வைத்தனர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்கு பின்புதான் அலெக்சாண்டர்  படுகொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே இந்த சம்பவத்திற்கும் அலெக்சாண்டர்  படுகொலைக்கும் தொடர்பு உண்டா? என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் இல்லை

கருங்கல்  காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த பொன்தேவி மற்றும் 2 போலீசார் கடந்த 3  மாதங்களுக்கு முன், கருங்கல் பகுதியை சேர்ந்த வாலிபரை கடத்தி பணம் பறித்த  வழக்கில் ைகதானவர்களுடன் தொடர்பு இருந்ததையடுத்து சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். அதன்பிறகு இந்த காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர்  நியமிக்கப்படவில்லை. எனவே கருங்கல் பகுதியில் நடைபெறும் குற்றங்களை தடுக்க  புதிய இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: