கமுதி அருகே வரத்து கால்வாய் பலத்த சேதம் ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு கிராமமக்கள் கொந்தளிப்பு

கமுதி, டிச.29:  கமுதி அருகே வரத்துக் கால்வாய் சேதமடைந்துள்ளதால், ஆண்டுதோறும் விவசாயம் பாதிப்படைந்து வருவதாக கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கமுதி ஊராட்சி ஒன்றியம், பேரையூர் ஊராட்சி சேர்ந்தகோட்டை கிராமத்தில்  200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயத்தை மட்டும் நம்பியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கின்றனர். சுற்று வட்டாரத்தில் நெல் விவசாயம் எங்கள் கிராமம் மட்டும் தான் செய்கிறோம் என்று கம்பீரமாக கூறும் இவர்கள், 620 ஏக்கர் நிலத்தில் நெல் மட்டும் பயிரிடுகின்றனர்.

ஆனால் வரத்துக் கால்வாய் சேதமடைந்து மண் சரிந்து காணப்படுவதால் விவசாயம் பாதிப்படைவதாக இக்கிராமமக்கள் கொந்தளிக்கின்றனர். மேலும் வரத்துக்கால்வாய் மேல் உள்ள பாலங்களும் சேதமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். பேரையூர் கண்மாயில் இருந்து சேர்ந்தகோட்டை கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்துக் கால்வாயை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்து எந்த பயன் இல்லாததால், கமுதி யூனியன் ஆணையாளர் மற்றும் கலெக்டரிடம் பலமுறை புகார் மனு அளித்தோம். ஆனால் அதுவும் எந்த பயன் இல்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். விவசாய பொருட்களை கொண்டு செல்ல, இங்கிருந்து சாமிபட்டி வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்து வருடக்கணக்காக காணப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் இச்சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். இக்கிராமத்தின் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் சரி செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: