ஓடும் லாரியில் உளுந்தம் பருப்பு மூட்டைகள் திருட்டு சோழவந்தான் அருகே பரபரப்பு

சோழவந்தான், டிச.27:  சோழவந்தான் அருகே ஓடும் லாரியில் உளுந்தம் பருப்பு மூட்டைகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  விருதுநகரிலிருந்து மங்களூருக்கு உளுந்தம் பருப்பு மூட்டைகளை லாரியில் ஏற்றி பாலக்காட்டை சேர்ந்த செல்வராஜ்(38) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.நேற்றுமுன்தினம் இரவு மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் கணவாய் பகுதி மேட்டில் லாரி மெதுவாக வந்துள்ளார். அப்போது பின்புறம் ஏறிய சிலர் தார்ப்பாயை கிழித்து மூட்டைகளை தூக்கி ரோட்டில் வீசியுள்ளனர். இதை கவனித்த டிரைவர் லாரியை நிறுத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது டூவீலரில் வந்த நபர்கள் கீழே விழுந்த மூட்டைகளை தூக்கிக் கொண்டு, தார்ப்பாய் கிழித்து திருடியவர்களுடன்  சேர்ந்து தப்பியுள்ளனர். இதையடுத்து லாரியை சோழவந்தான் காவல் நிலையத்திற்கு டிரைவர் கொண்டு வந்தார். 25 கிலோ எடையுள்ள சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள 11 மூட்டைகள் திருடு போயிருப்பதாக கூறினார். இதையடுத்து செக்கானூரணி போலீசார் அப்பகுதியில்  உள்ள சிசிடிவி காட்சிகளை  ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகரில் நான்கு வழிச்சாலையில் கிளம்பிய லாரி கப்பலூர் டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக திருமங்கலத்திலிருந்து சோழவந்தான் வழியாக செல்லும் சாலையில் வந்த போது தான் இந்த திருட்டு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: