பழநி கடைகளில் ரூ.10 நாணயம் வாங்க மறுப்பு பக்தர்கள் அவதி

பழநி, டிச. 27: பழநி கடைகளில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்திய அரசு கடந்த 2016ம் வருடம் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. இந்த நோட்டுக்களை மாற்ற பொதுமக்கள் வங்கிகளில் நாள்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதுபோல் தற்போது 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால் பக்தர்கள், பொதுமக்கள், வணிகர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். 10 ரூபாய் நாணங்களை வணிகர்களோ, கடைக்காரர்களோ, பொதுமக்களோ வாங்குவதில்லை. இதனால் பழநி மக்கள் குறிப்பாக பழநி கோயிலுக்கு வந்துள்ள பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விசாரணையில் வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்கததாலேயே இந்த வதந்தி உருவானது தெரியவந்துள்ளது. நாள்தோறும் வங்கி ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் 10 ரூபாய் நாணயத்தை செலுத்த முடியாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. வங்கிகளில் நாளொன்றிற்கு 100 ரூபாய் அளவே ஒரு நபரிடமிருந்து 10 ரூபாய் நாணயம் பெற்று கொள்கின்றனர். அதிகமாக வாங்குவதில்லை. இதனால் 10 ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்கள் கடும் திண்டாட்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது, உயர் அதிகாரிகள் 10 ரூபாய் நாணயம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வந்துள்ளதென்றும், திருப்பி வாங்க வேண்டாமென்றும் வாய்மொழி உத்தரவாக தெரிவித்து விட்டனர். மொத்தமாக வாங்கமால் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி கொண்டுதான் இருக்கிறோம். ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் குறித்த வதந்திக்கு அழுத்தமான முறையில் மறுப்பு தெரிவிக்க வேண்டும். தவிர, வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்கவும் வகை செய்தால்தான் பொதுமக்கள், பக்தர்கள் மத்தியில் உள்ள பீதி குறையும். இவ்வாறு கூறினர்.

Related Stories: