திருப்பூர் பகுதியில் தொடர் வழிப்பறி போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க கோரிக்கை

திருப்பூர், டிச. 25: திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த லக்கி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் பின்னலாடை சார்பு நிறுவனங்களும், வழிபாட்டு தளங்கள், பள்ளிகள் ஆகியவைகள் உள்ளது. குடியிருப்புகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் திருடர்கள் மாலை நேரத்தில் நடந்து செல்லும் பொதுமக்களிடம் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த ரோட்டில் செல்போனில் பேசியபடி பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்து சென்றனர்.  இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை துரத்தி பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் செல்போன் பறித்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.  இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் அப்பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்கின்றனர். இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் குற்றங்கள் அதிகரிக்கிறது. ஒரு வேலை போலீசாருக்கு தெரிந்தே குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறதா? என்ற சந்தேகமும் வலுக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: