திருச்சி டிடிட்சியாவில் 18ம் தேதி துவக்கம் இலவச ஆயத்த ஆடை உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி பெண்கள் பங்கேற்க அழைப்பு

திருச்சி, டிச.13: திருச்சி டிடிட்சியாவில் பெண்களுக்கு இலவசமாக ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதில் பெண்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் திருச்சி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (டிடிட்சியா) இணைந்து ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் தொழில்முனைவோர் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறது. பயிற்சியானது வரும் 18ம் தேதி துவங்கி ஜனவரி 30ம் தேதி வரை 6 வாரம் நடக்கிறது. இதன் துவக்க விழா வரும் 18ம் தேதி டிடிட்சியா கூட்டஅரங்கில் நடக்க உள்ளது. இந்த பயிற்சி முகாமில் 25 வயதிற்கு மேல் 35 வயதிற்குட்பட்ட 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்த பெண்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். இதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவன மையத்தின் சான்றிதழ் அளிக்கப்படும். விரும்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்துடன் ஆதார் அடையாள அட்டைநகல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வயது சான்றிதழ், தாழ்த்தப்பட்டவராக இருப்பின் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றுடன் திருச்சி டிடிட்சியா அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம், சிட்கோ காம்ப்ளக்ஸ், தொழிற்பேட்டை, அரியமங்கலம், திருச்சி என்ற முகவரியிலோ அல்லது 0431- 2440119,2440114, 96595 58111 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என டிடிட்சியா தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Related Stories: