ஆத்தூர் பால் நுகர்வோர் விற்பனை சங்கத்தில் ₹41 லட்சம் முறைகேடு புகாரில் முன்னாள் இயக்குநர்களிடம் விசாரணை

ஆத்தூர், டிச.13:  ஆத்தூர் பால்  நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் ₹41 லட்சம் முறைகேடு குறித்த புகாரின் மீது  முன்னாள் இயக்குநர்களிடம் சேலம் கூட்டுறவு சார்பதிவாளர் விசாரணை  நடத்தினார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகில்  உள்ள நகராட்சி விற்பனை அங்காடி  கட்டிடத்தில் நகர பால் நுகர்வோர் கூட்டுறவு  விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கடந்த 2016-18ம்  ஆண்டு வரை ₹41 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கையின் போது  தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, நிதி இழப்பு ஏற்பட்ட ₹41 லட்சத்தை  சங்கத்திற்கு திருப்பி செலுத்த அப்போதைய சேலம் மாவட்ட அதிமுக மருத்துவரணி  துணை செயலாளர் மற்றும் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட டாக்டர் சுரேஷ்  மற்றும் இயக்குநர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், சங்கத்தின்  தலைவராக இருந்த டாக்டர் சுரேஷ் 2017ம் ஆண்டு இந்த பிரச்னை எழுந்தவுடன்  தலைமறைவானார்.

Advertising
Advertising

அதன்பின் அவர் தனியார் வங்கி நிர்வாகத்திடம் கனரக வாகனம்  வாங்குவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த அவர் மீண்டும்  தலைமறைவானார். இதையடுத்து, 2017ம் ஆண்டில் இருந்து நிதி இழப்புக்கான  விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று ஆத்தூர் பால்  கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு வந்த சேலம் கூட்டுறவு சார்பதிவாளர் சாந்தி  தலைமையிலான அலுவலர்கள் சங்கத்தில் நடைபெற்ற நிதி இழப்பீடு முறைகேடு  குறித்து முன்னாள் இயக்குனர்கள் மற்றும் சங்க பணியாளர்களிடம் விசாரணை  நடத்தினர். இதுகுறித்து கூட்டுறவு சார்பதிவாளர் சாந்தி கூறுகையில்,  சங்க நிதி இழப்பு முறைகேடு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் நிதி இழப்பு  மற்றும் முறைகேடுகள் அனைத்தும் தலைவராக இருந்த டாக்டர் சுரேஷ் தான்  செய்தார் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட  கூட்டுறவு அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் என்றார். கடந்த 3 ஆண்டுக்கும்  மேலாக தலைமறைவாக உள்ள டாக்டர் சுரேஷ் குறித்து எந்தவித தகவலும் இல்லாத  நிலையில், அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வதில் மாவட்ட பால் கூட்டுறவு  துறை அலுவலர்கள் கவனம் செலுத்தவில்லை. இதனாலேயே விசாரணையில் மிகப்பெரிய  தொய்வு ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: