பெரிய வெங்காயம் விலை சரிகிறது

ஈரோடு, டிச.13: ஈரோட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.160ல் இருந்து ரூ.50 வரை சரிந்து நேற்று ரூ.110க்கு விற்கப்பட்டது. நாடு முழுவதும் பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நிலைமையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தினசரி நேதாஜி தினசரி மார்க்கெட்டிற்கு பெங்களூரு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரோடு தினசரி மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு நாளொன்றுக்கு 500 மூட்டைகள் வரை வரத்து இருந்த நிலையில் 50 மூட்டைகளாக குறைந்ததால் பெரியவெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.200 வரை விற்பனையாகி வந்தது.

இந் நிலையில், கடந்த 3 நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை மெல்ல சரிந்து வருகிறது. ஈரோடு உழவர் சந்தையில் நேற்று கிலோ ரூ.160க்கு விற்பனையான பெரிய வெங்காயம் நேற்று கிலோ ரூ.120க்கு விற்பனையானது. கிலோ ஒன்றுக்கு ரூ.40வரை விலை சரிந்துள்ளது.

இதேபோல், தினசரி மார்க்கெட்டிலும் கிலோ ஒன்றுக்கு சராசரியாக ரூ.50 வரை சரிந்து அதிகபட்சம் கிலோ ரூ.110க்கு விற்பனையாகி வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மார்க்கெட்டுகளுக்கு வரத்தொடங்கி இருப்பதால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், சின்ன வெங்காயத்தின் விலையும் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் கிலோ ரூ.90க்கு விற்பனையான சின்னவெங்காயம் நேற்று ரூ.80க்கு விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் கூறினர்.

Related Stories: